கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி…..

Monday, June 13th, 2016

நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!…

தமிழ் மக்களின் உரிமை குறித்து மாரித்தவளைகள் போல் மாறிமாறி நீடித்து கத்துவதால் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடும் என்பது பகற்கனவு.

மீட்பர்கள் தாமே என்று காலங்காலமாக தமிழ் மக்களை நம்பவைத்து தம்பட்டம் அடிப்பவர்கள் இதையே இன்றும் செய்துவருகிறார்கள்.

“ஆடுகின்ற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும். பாடுகின்ற மாட்டை பாடிக் கறக்கவேண்டும்” என்று எம் முன்னோர்கள் முதுமொழியாக சொன்னது ஒன்றும் பொய்யல்ல.

ஆனாலும் தமிழர் அரசியலில் சமகால சூழல் உணர்ந்து இந்த தந்திர வழிமுறையை பின்பற்ற சிலர் இன்னமும் தயாராக இல்லை.

ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி தமிழ் பேசும் மக்களின் சகல பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகிறது.

ஆனாலும் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி இன்று எழுப்பும் குரல்கள் எதுவும் கடந்த ஆட்சிக் காலத்தில் எழுப்பப்படவில்லை என்று சிலர் சுட்டுவிரல் நீட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் நீட்டும் சுட்டுவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே திரும்பி நீளுகின்றன.

அரசை எச்சரிக்கின்றோம்… போராட்டம் வெடிக்கும்… பொறுமைக்கும் எல்லையுண்டு… இனியும் பொறுக்கமாட்டோம்,

இப்படி கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி இவர்கள்  வேறெதைக் கண்டார்கள்?

உணர்ச்சி கொப்பளிக்க பேசிப் பேசி “சும்மா இருந்த சங்கையும்  ஊதிக்கெடுத்தவன்” போல் எமது மக்கள் மீது அவலங்களையும், அழிவுகளையும் சுமத்தியது ஒன்றைத் தவிர வேறு எதை அவர்கள் சாதித்தார்கள்?

அரசை எச்சரித்தவர்கள் அடுத்த தினமே அலரிமாளிகையின் பின் கதவுதட்டி ஆட்சியாளர்களுடன் கூனிக்குறுகி இருட்டில் நின்று கைகுலுக்கி கொண்டதுதான் மிச்சம்.

ஆனாலும், ஈழ மக்கள் ஐனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இப்படி ஒருபோதும் உணர்ச்சி கொப்பளிக்க பேசியதும் கிடையாது.

திரைமறைவில் அரச தரப்போடு கைகுலுக்கிக்கொண்டதும் கிடையாது. அவ்வாறு உணர்ச்சி கொப்பளிக்க அவருக்கு பேசமுடியாது என்றும் அர்த்தமல்ல.  எமது உரிமைப்போராட்டம் நடந்தபோது தொடை நடுங்கிகளாக ஓடி ஒளிந்து கொண்டவர்களும்,.. எமது மக்களுக்காக ஒருவியர்வை கூட சிந்தமறுத்தவர்களும்,….

உரிமைப் போராட்டத்தில் எமது மக்கள் செத்தொழிந்துகொண்டிருக்க காலிமுகத்திடலின் கடற்கரை அழகை ரசித்திவர்களும்,..

கொழும்பு கறுவாக்காட்டில் குறட்டைவிட்டு தூங்கியவர்களும் இப்படி வீரப்பிரதாபம் பேசமுடியும் என்றால்,..

ஒரு சுதந்திரப் போராட்டத்தையே களத்தில் நின்று வழிநடத்திச் சென்று, ரணங்களை சுமந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இந்த வீர விளையாட்டுக்கள் ஒன்றும் முடியாத காரியமல்ல.

மதிநுட்ப சிந்தனைகளை ஏற்று நடைமுறை யதார்த்த வழி நின்று ஆட்சியில் பங்கெடுத்த அவர் செயலில் சாதித்தவைகள் ஏராளம்.

குரலெதுவும் எழுப்பாமல் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் சார்ந்து நின்ற அரசிடமிருந்து கறந்தெடுத்து மக்களுக்கு கொடுத்தவைகள் யாவும் ஊர் பார்த்த உண்மைகள்.

இத்தனைக்கும் போதிய அரசியல் பலமின்றியே அனைத்தையும்  தனது ஆளுமையாலும் மதிநுட்ப சிந்தனையாலும் சாதித்தவர்.

புனர்வாழ்வு, புனரமைப்பு, வாழ்வாதாரம், வறுமை ஒழிப்பு, வாழ்வியல் எழுச்சி, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு, மீள் கட்டுமானம், நிலமீட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மீட்பு, கல்வி வசதி, காணி யுரிமை என்று அந்த சாதனைப் பட்டியல் இன்னும் நீண்டுசெல்கிறது.

அரசியலுரிமை குறித்து அவர் வலியுறுத்திவந்த 13வது திருத்தச்சட்டம் கூட வடக்கு கிழக்கில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்திவைத்ததின் மூலம் நடைமுறையின் ஆரம்பத்தை தொட்டிருக்கிறது.

இவைகள் அனைத்தையும் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சாதித்துக் கொண்டவரே ஒழிய அர்த்தமற்றகையில் குரல்களை எழுப்பியதால் கிடைத்த பயன்கள் அல்ல. அதிகாரத்தில் இருந்தபோது அரசுடன் இணக்கமாக பேசி தீர்வு கண்டார்.

போதிய அரசியல் பலத்தோடு அதிகாரத்தில் இருந்திருந்தால்  தமிழ் மக்களின் தiலை விதியையே மாற்றியிருப்போம் என்று ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி கூறிவருவது பொய்யல்ல என்பதும் இதிலிருந்து புலப்படுகிறது.

பேசி தீர்ப்பதற்கான அரசியல் தளமும் மதிநுட்பமும் இருக்கும்போது அர்த்தமற்று குரல் எழுப்பி இருப்பதையும் குழப்பியடிக்கும்  அரசியல் சித்துவிளையாட்டு அவருக்கு விருப்பமானதல்ல.

இன்று அதிகாரத்தில் அமர வாய்ப்பின்றி போனபோது அன்று செயலில் காட்டியதை இன்று குரலில் எழுப்புகிறார்.

ஆகவே,…..அன்று செயலில்….. இன்று குரலில்….

“கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி”

நன்றி!…

மறுபடியும்

மறுமடலில் சந்திப்போம்,

Related posts: