செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 4 டிசம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, December 4th, 2008

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

சமாதானத்திற்கான பாதை என்பது நீண்டது. நெடியது. அந்த பாதையில் நடந்து செல்வது மிகவும் கடினமானது. நெடியதும் கடினமானதுமான சமாதானத்திற்கான பாதையில் விழ விழ எழுந்து குருதி துடைத்து நாங்கள் சமாதானத்தின் இலக்கு நோக்கி நடந்து வருகின்றோம்.நான் உறவுக்கு கரம் கொடுக்க விரும்புகின்றேன். அதேவேளையில் உரிமைக்காக குரல் கொடுக்கவும் விரும்புகின்றேன். பலத்த சவால் களுக்கு மத்தியிலும் அச்சுறறுத்தலுக்கு மத்தியிலும் தாமாகவே விரும்பி இந்தப் பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பிவைத்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் சார்பாக உறவுக்கு கரம் கொடுப்பதற்காகவும் எமது மக்களின் நலனுக்காகவும் நான் இந்தச் அரசாங்கத்தின் அமைச்சர வையில் பங்கெடுத்து வருகின்றேன். அதேவேளையில் தமிழ் பேசும் மக்களின் பெயரால் எமது மக்களின் விருப்பங்களுக்கு மாறாகப் புலித் தலைமையால் நடாத்தப்பட்டு வருகின்ற அழிவு யத்த வன்முறையை எதிர்த்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் நான் எமது மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன். வெந்நிறப் புன்னகையோடு படைத் தளபதிகளும் படையதிகாரிகளும் இந்தச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலர் பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உறவுக்கு கரம் கொடுத்து நான் அவர்களை வர வேற்கின்றேன்.

யாழ்.குடாநாட்டு மக்களை தென்னிலங்கையில் இருந்து நிலத்தொடர் பற்ற வகையில் பிரித்து வைத்திருந்த பாதையில் ஒன்றான ஏ32 பாதையை பல தியாகங்களுக்கு மத்தியில் புலித் தலைமையிடமிருந்து மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு எமது மக்களின் சார்பாக இந்தச் சபையில் நான் பாராட்டுத் தெரிவிக்கின்றேன். இதன் மூலம் யாழ்.குடாநாடு கடற்தொழிலாளர்களின் அன்றாட உழைப்புக்கு வழிதிறந்து அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த படையினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஏ32 பாதையை திறந்து விட்டிருப்பதால் இனி வரப்போகும் நாட்களில் நன்மையடையப் போகும் எமது மக்களின் சார்பாக எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரிவித்துக் கொண்டு உனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

மனிதர்கள் யாவரும் சமன் என்ற சமவுரிமையை இந்த மண்ணில் நிலைக்க வேண்டும்.இன ஐக்கியம் இன ஒருமைப்பாடு இன சமத்துவம் என்பன இந்த மண்ணில் செழித்து வளர வேண்டும். உணவு முதற்கொண்டு உரிமைகள் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும். அச்சமும் அமைதியற்ற சூழலும் நீங்கி சுதந்திரமான குடிமக்களாக அனைத்து இன மக்களும் அமைதியான ஒரு தேச்ததில் தலைநிமிர்ந்து வாழவேண்டும். இதுவே எமதும் எமது மக்களினதும் விருப்பமாகும். இவற்றுக்குத் தடையாக இருந்து வருபவர்கள் ஓர் இனத்தின் பெயரால் இந்த இனத்தையே சுடுகாடு நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கும் புலித்தலைமையினர்தான் என்பதை நான் இந்த சபையில் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள இன சமூகங்களைச் சார்ந்த அனைத்துக் குடிமக்களும் தங்களது தனி மனித பாதூகப்பையே இழந்து நிற்பதற்குக் காரணம். புலித்தலைமையை தூண்டிவிட்டிருக்கும் இந்த அழிவு யுத்தம்தான் என்பதை யாவரும் அறிவீர்கள். அனைத்து இன மத சமூக மக்களையும் புலித்தலைமையிடமிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். புலித்தலைமையின் பலாத்காரப் பிடிக்குள் எஞ்சியிருக்கின்ற எமது மக்களையும் மீட்டெடுத்த அவர்களையும் பாதுகாக்க வேண்டும்.புலித்தலைமையால் மூளைச்சலவை செய்யப்பட்டும் பலாத்காரமாகப் பிடித்துச் செல்லப்பட்டும் பலிக்களத்தில் பலிக்கடாக்களாக இறங்கி விடப்பட்டிருக்கும்  எமது பிள்ளைகளைப் புலித் தலைமையிடமிருந்து பாதுகாக்க வேண்டும். சமாதானத்துக்காகவும் அரசியலுரிமைச் சுதந்திரத்தைப் பெறுவதற்காகவும் விரும்பி உழைக்கின்ற ஜனநாயக சக்திகளைப் புலித்தலைமையிடமிருந்து பாதுகாக்க ஜனநாயக சக்திகளைப் புலித்தலைமையிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அமைதி வழியையும் இன ஐக்கியத்தையும் நாம் பேண வேண்டும.

இன்று எமது தேசமும் சமாதானத்தை விரும்பும் அனைத்து மனித சமூகமும் பூரணமானன பாதுகாப்பையே நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இச்சபையில் நடந்து கொண்டிருக்கின்ற பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மீதான குழுநிலை விவாதத்தில் நான் காத்திரமான சில விடயங்களைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.புலித்தலைமை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே தொடர்ந்தும் யுத்தத்தை நடத்திக் கொண்டிருப்பதாக புலித்தலைமையின் தொங்கு தசைக்காக செயற்பட்டு வருகின்ற புலிக்கூட்டமைப்பினர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.(இடையீடு) நான் என்னுடைய கருத்தைத் தெரிவிக்கிறேன். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள். நாங்கள் கள்ளவோட்டு போட்டுப் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளவர்கள்தானே. எனவே உங்களுடைய கருத்து மக்களுடைய கருத்தல்ல. பாவம் இவர்கள். புலி வாலைப் பிடித்த இவர்கள் அதனைக் கைவிட்டு வர முடியாமல் தமது தலைவர்களைக் கொன்றவர்களுடைய கொத்தடிமைகளாக எமது மக்க்ளின் வாழ்வியல் உரிமைகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கவே  நிர்ப்பந்திக்கப்பட்டிருகின்றார்கள்.புலித்தலைவர் பிராபகரன் தனது வருடாந்த கொலைகாரத் தின உரையில் குறிப்பிட்டதுபோல் புலித்தலைமை சுதந்திரத்துக்காகப் போராடுகின்ற ஒரு சுதந்திர இயக்கம் அல்ல. அது சுடுகாட்டுக்கு வழிகாட்டுகின்ற ஓர் இயக்கம் என்றுதான் எமது மக்களே ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றார்கள்.

தன்னோடு கூடப் படுத்திருந்த தனது சகாவை நடுஇராத்திரியில் கொன்றொழித்த பிரபாகரன் தமது ஒரு சுதந்திர இயக்கம் என்று கூறிவிட முடிhயது. ஜனநாயக வழியிலும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த அனைத்து தமிழ்த் தலைவர்களையும் கொன்றொழித்த புலித்தலைமை தமது இயக்கத்தைச் சுதந்திர இயக்கம் என்று கூறிவிட முடியாது. காலங்காலமாக ஒன்றாக வாழ்ந்திருந்த தமிழ்பேசும் முஸ்லிம் சகோதர மக்களைக் கொன்றொழித்த அவர்களை அவர்களது வரலாற்று வாழ்விடங்களிலிருந்து துரத்தியடித்து அம்மக்களுடைய குடியிருப்புக்களை ஆக்கிரமித்துக்கொண்ட புலித் தலைமை தம்மைச் சுதந்திர இயக்கம் என்று கூறிவிட முடியாது.எதுவும் அறியாத அப்பாவிச் சிங்கள சகோதர மக்களை அவர்களுடைய வீடுகளுக்குள் புகுந்தும் வீதியில் வைத்தும் கொன்றொழித்து வெறியாட்டம் நடத்திய புலித்தலைமை தம்மைச் சுதந்திர இயக்கம் என்று கூறிவிடமுடியாது. புத்திஜீவிகள் கல்விமான்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் படைப்பாளிககள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர முதல்வர்கள் பிரதேசசபைத் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்க்ள என தமது சொந்த இனம் என்றும் பாராது கொன்றொழித்து வருகின்ற புலித்தலைமை தம்மைத் தமது இனத்துக்காக போராடுகின்ற ஒரு சுதந்திர இயக்கம் என்று கூறிவிட முடியாது. ஏன் என்று கேள்வி கேட்டவர்க்ள நியாயங்களை தட்டிக் கேட்டவர்கள். கட்டாய வரியும் கப்பமும் செலுத்த மறுத்தவர்கள் ஒத்துப்போக மறுத்தவர்கள் என சொந்த இனத்தவர்களையே ஒழித்துக் கட்டிய புலித்தலைமை ஒருபோதும் தம்மைச் சுத்நதிர இயக்கம் என்று கூறிவிட முடிhயது. சமாதானத்தை நேசிப்பவர்களின் கழுத்திலே கத்தியை வைத்துக்கொண்டு சமாதானத்துக்கு தாம் தயார் என்று புலித்தலைமை கூறியிருப்பதை உலகம் ஏளனமாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றது. எமது மக்களின் தனிமனிதப் பாதுகாப்பும் தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்துகொண்டு அச்சம்  தரும் பதற்றமான சூழலைத் தூண்டிவிட்டு கொண்டுள்ள நிலைமையில் அவர்களே இன்று சமாதானம் குறித்துக் கூறியிருப்பதை எமது மக்கள் வெறுப்புடன் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். புலித்தலைமை சமாதானத்துக்கு தாம் தயார் என்று கூறுவது உண்மை என்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு எமது மக்களி;ன் வாழ்விடங்களுக்குள் புகுந்துகொண்ட புலித்தலைமை எமது மக்களின் வாழ்விடங்களுக்குள் தனிமனித படுகொலைக்களமாக மாற்றியது ஏன்? என்று கேட்கின்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் நேரடியாக புலித்தலைமை பிரபாகரனோடு பேச விரும்புவதாக கூறியபொழுது புலித்தலைமை அதற்கான கதவுகளை மூடிக் கொண்டது ஏன்? என்று கேட்கின்றேன்.

புலித்தலைமை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் எமது அப்பாவி மக்களை பலாத்காரமாகத் தெருக்களுக்கு இழுத்து போரைத் தொடங்க ஆணையோடு தலைவா என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்களுடைய கைகளில் திணித்து சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தூண்டியது ஏன்? என்று கேட்கின்றேன்.புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்தில் கைகட்டி நின்ற படையினரின் சோதனைச் சாவடிகளை எரித்துக் கொளுத்தி படையினர் மீது வலிந்து கட்டிய தாக்குதலைப்; புலித்தலைமை நடத்தியது ஏன்? என்று கேட்கின்றேன்? புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தின் புலித்தலைமை மாவிலாறு அணைக்கட்டைப் பலாத்காரமாக மூடிவிட்டு எமது மண்ணில் பாரிய யுத்த களத்தை திறந்து விட்;டது ஏன்? என்று கேட்கின்றேன். இன்று புலித் தலைமை சமாதானத்திற்கான சூழலை தாமே யுத்த சூழலாக மாற்றிவிட்டு மீண்டும் எமது மண்ணிலே அழிவு யுத்ததையும் தாமே தொடக்கி வைத்துவிட்டு அரசாங்கமே யுத்த நிறுத்த ஒப்ப்ந்தத்தை மீறியதாகக் கூறி வருகின்றது. சர்வதேச யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரே இதற்கு உண்மையான சாட்சிகளாக இருக்கின்றனர்.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே இன்று இந்த நாட்டிலே வாழும் ஒவ்வொரு சாதார குடிமகனும் தனது சொந்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வாழ்;ந்து கொண்டிருக்கின்றான். இந்த ஒரு சூழலில்தான் இந்த விவாதமும் நடந்த கொண்டிருக்கின்றது. இன்று புலித்தலைவர் பிரபாகரன் தான் தனித்து நின்று போராடுவதாகத் தனது வருடாந்தக் கொலைக்காரர் தின உரையில் அழுது வடித்திருக்கின்றார். அவரைத் தனித்து நின்று போராடச் சொல்லி யார் சொன்னார்கள்? என்று நான் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அவரிடம் கேட்கின்றேன். தம்முடன் இருந்த சக விடுதலை அமைப்புக்களை தடைசெய்து ஆயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் மற்றும் தலைவர்களையும் தாமாகவே கொன்றொழி;த்துவிட்டு இன்று நிலங்களைக் கைவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனித்து நின்று போராடுவதாக கூறும் இந்தப் பலித் தலைமை யாரிடம் அனுதாபம் தேட முற்படுகின்றது. இதனை மனிதத் துயரங்கள் யாவும் அடங்காத அருவருப்பாக ஆசைகளில் இருந்;துதான் பிறப்பெடுகின்றன என்று தனது வருடாந்த கொலைக்காரர் தின உரையில் தன்னிலை விளக்கம் கூறும் பிரபாகரனிடம் நான் கேட்க விரும்புகின்றேன். புலித்தலைமையின் அடங்காத அருவருப்பான ஆசை என்பது தனித் தலைமை வெற்றியும் யுத்தத்தின் மீது கொண்ட தீராத மோகமுமே ஆகும் என்பதை முழு உலகமும் அறிந்து வைத்திருக்கின்றது.பிரபாகரனின் இவ்வாறான அருவருப்பான ஆசைகள்தான் இன்று அவர் தனது பிறந்த தினத்தையே வழமைபோல் கொண்டாட முடியாமல் பங்கர் மாளிகைக்கள் முடங்கிப் போயிருப்பதற்குக் காரணம் என்பதை நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

பிரபாகரன் அனைத்து விடுதலை அமைப்புக்களையும் அரவணைத்து ஐக்கியப்பட்டுச் செயற்பட்டிருந்தால் என்றோ அரசியல் உரிமையையும் சமாதானத்தையும் நடைமுறையில் அனுபவித்திருப்பார்கள்.ஐக்கியப் பட்ட அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து இன மற்றும் சமூக மக்களும் சம உரிமைபெற்ற பிரஜைகளாக தலைநிமிர்ந்து வாழ்ந்திருக்க முடியும். நாம் எல்லோரும் இணைந்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுச் செயற்பட்டிருந்ததால் பலி கொடுக்கப்பட்ட புலி இயக்க உறுப்பினர்களின் தொகை இன்று 22000தைக் கடந்து விட்ட துயரம் நிகழ்ந்திருக்காது. இன்று அவர் தனித்து நின்று யுத்தம் நடத்தி தங்களை அழித்துக் கொள்ளும்  அதே நேரம் எமது மக்களும் அழிந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை – இ;நதிய ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை கொல்லப்ப்ட புலி இயக்க உறுப்பினர் தொகை 652 பேர் மட்டும்தான். ஆனால் இன்று தனது அடங்காத அருவருப்பான ஆசையினால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த புலித் தலைமை இன்றுவரை 22000ற்கும் அதிகமான எமது பிள்ளைகளை அழிவு யுத்தத்திற்கு பலி  கொடுத்திருக்கின்றது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது முதுமொழியாகும். ஆனால் புலித்தலைமை தாம் விதைத்த வினைக்கு தினை விதைத்த எமது மக்களின் பிள்ளைகளையும் இன்று பலி கொடுத்து வருவதுதான் எமக்கு வேதனையைத் தருகின்றது.

(இடையீடு)

இந்த 22000 பிள்ளைகளும் எமத பிள்ளைகள்தாம். அவர்கள் எமது மக்க்ளின் கருவறை வித்துக்கள் தனிநாடு என்ற அடைய முடியாத சாம்ராச்சியக் கனவுகளுக்காகப் புலித்தலைமையால் இதுவரையும் எமது  மக்களுக்கு அழிவின் சின்னமாக 22000 சமாதிகளை மட்டும்தான் பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கின்றது. இதனால் இன்று இந்த 22000 பிள்ளைகளையும் பெற்ற வயிறுகள் பற்றி எரிகின்றன. அவர்கள் பெற்ற வலியும் பட்ட துயரும் புலித் தலைவர் பிரபாகரனுக்கு தெரியாது. அதேவேiளை பாதுகாப்பு படையில் இருக்கின்ற எமது சகோதர இன மக்களின் பிள்ளைகளும் இன்றுவரை உயிரிழந்துகொண்டு வருகின்றார்கள். அவர்கள் பாதுகாப்புப் படையில் இருந்த உயிர்த் தியாகம் செய்த புலித்தலைமையிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்துக் கொடுத்த எமது மண்ணில் தேர்தல்களை நடாத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கியதனால்தான் நான் இன்று இந்தப் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். இதன்மூலம் நாம் எமது மக்களுக்குப் புரிந்து வரும் பணிகள் ஏராளமானவையாகும் இதை உணராமல் பாதுகாப்புப் படையினர் மீட்டுக் கொடுத்த மண்ணில் நின்று திருட்டு வாக்குப் போட்டு திருகுதளமிட்டு பாராளுமன்றம் வந்திரக்கம் புலிக் கூட்டமைப்பினர் அதே பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவே இன்று இந்தப் பாராளுமன்றத்தில் வீராவேச உரையை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்த வீராவேசப் உரைகளினால் நடக்கப்போவது எதுவும் இல்லை.புலித்தலைமையினால் மேற்கொள்ளப்படுகின்ற அழிவு யுத்தத்தை தூண்டி விடுவதற்காகவே புலிக்கூட்டமைப்பினர் இந்த நாடாளுமன்றத்தினூடாக விளம்பரம் நடாத்தி வருகின்றனர்.புலிக்கூட்டமைப்பினர் எமது மக்களை அழிவுபாதைக்கு இட்டுச் செல்வதற்காகவே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அனைத்து அழிவுகளுக்கும் அந்த ஒப்ப்நததை ஏற்க மறுத்து அழிவு யுத்தத்தை தொடக்கி வைத்த புலித்லைமையே பிரதான பொறுப்பெடுக்க வேண்டும் என நான் இந்தச் சபையில்  கூறி வைக்க விரும்புகின்றேன்.

எமது அயலக நட்பு நாடாகிய இந்தியாவின் இளைய தலைவரான ராஜீவ் காந்தி அவர்களைக் கொன்றொழித்த புலித்தலைமை இநதியாவின் நட்புறவை முறித்துக் கொண்து. இப்பொழுது இந்திய உறவைப் புதுப்பிக்க விரும்புவதாக பாவ மன்னிப்பு கேட்பதுபோல பசாங்கு செயது கொண்டிருக்கின்றது.புலித்தலைமை புலித்தலைமையின் இந்த நட்புறவை எவரும் நம்பப்போவதில்லை. தோளிலே கை போட்டு முதுகிலே குத்தும் புலித்தலைமையின் துரோகத்தனங்களை எமது மக்களோ அயலக நட்பு நாடாகிய இந்தியாவோ அன்றி சர்வதேச சமூகமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ப்போவதில்லை. ஆனாலும் எமது மக்களுக்கு அரசியலுரிமைப்பிரச்சினை உண்டு புலித்தலைமையின் பிரச்சினை வேறு.தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு.

இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் எமது அயலக நட்பு நாடாகிய இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருப்பது போல சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகின்றது அதேபோல சிங்கள சகோதர மக்களும் முஸ்லிம் சகோதர மக்;களும் இங்கு அவர்களது பிரதிநிதிகளாக வந்திருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகின்றேன்.

யாழ்.குடாநாட்டில் உள்ள பாதுகாப்பு படையினருக்காக 40000 சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று பாராளுமன்றத்தில் யுத்தப் பிரகடனம் செய்திருந்த புலிக்கூட்டு உறுப்பினர்கள்தான் இன்று இந்தியாவின் காலில் விழுந்து மன்றாடி யுத்த நிறுத்தம் கோருவதற்காக இந்தியாவுக்கப் பயணமாகவதற்குத் தயாராகி வருகின்றார்கள். இந்த யுத்த நிறுத்;தம் யாருக்காக? என்று கேட்கின்றேன். மக்களைக் காப்பதற்காகவா? அல்லது புலித்தலைமையை உயிராபத்திலிருந்து மீட்பதற்காகவா? மக்களைக் காப்பதற்காகவா? என்று கேட்கின்றேன். புலிக் கூட்டமைப்பின் மக்க்ளைக் காப்பதற்காகவே யுத்த நிறுத்தம் கோருவதாக இருந்தால் இன்று வன்னியில் புலித் தலைமையின் பலாத்காரப் பிடிக்கள் சிக்குண்டு இருக்கும் எமது மக்க்ளi மீட்பதற்கக அவர்க்ள ஏன் குரல்’ எழுப்பவில்லை. என்று நான் கெட்கின்றேன். பலாத்காரமாக இளம் கர்ப்பினிpப் பெண்களைப் பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சி அளிப்பதாகக் கூறி ஆறடி ஆழமுடைய பங்கருக்குள் குதிக்குமாறு நிர்ப்பந்தித்து வருவதனால் பல இளம் பெண்களின் வயிற்றில் வளர்ந்து வரும் சிசுக்கள் அழிக்கப்படுகின்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெற்ற வயிறுகள் துடித்திருக்க அவர்களது கண் முன்பாகவே பிள்ளைகளைப் பலாத்காரமாக அழிவு யுத்தத்துக்குப் பலி கொடுப்பதற்காகப் பிடித்துச் சென்று கொண்டிருக்கின்றது.புலித்தலைமை இவற்றைத் தட்டிக்கேட்க வக்கற்ற புலிக்கூட்டு உறு;பபினர்கள் புலித்தலைமையை மட்டும் பாதுகாக்கும் சுயலாப நோக்கிலேயே யுத்த நிறுத்தம் கோருகின்றார்கள் என்பதையுயம் நான் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, புலித் தலைமையி னால் மேற்கொள்ப்படுகின்ற இந்த அழிவு யுத்தம் எமது மக்களுக்கு ஒரு பொழுதும் எந்தத் தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. எந்தக் காலத்திலும் புலித்லைமை சமாதானத்திற்கு வரப்போவதில்லை.எந்தவொரு அரசியல் தீர்வையும் அவர்கள் ஏற்கப்போவதுமில்லை.ஊசிமுனை ஓட்டைக்குள் ஒட்டகம் நுழையலாம் எறும்புப் புற்றுக்கள் யானைகூட புகுந்து குடியிருக்கலாம் உலக மகா சர்வதிகாரியான ஹிட்லர் கூட மீணடும் பிறந்து வந்து சமாதானம் தொடர்பாகப் பேசலாம். இந்த மண்ணில் இவ்வாறான பல அதிசயங்கள் நிகழக்கூடிய நிலை உருவாகினாலும் பிரபாகரன் மட்டும் ஒருபொழுதும் அரசியல் தீர்வுக்கும் சமாதானத்திற்கும் வரப்போவதில்லை என்பது முடிந்த முடிவும் உண்மையும் ஆகும். ஆனாலும் இந்த மண்ணில் சமாதான சகவாழ்வை உருவாக்காதவரை அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்ற மக்களாக வாழும் அமைதிப் பூங்காவாக இந்த மண்ணை உருவாக்காதவரை பிரபாகரனின் அச்சுறத்தலுக்கு அஞ்சி நான் ஒதுங்கிவிடப்போவதில்லை. சமதானமே எனது உயிர்மூச்சு. சம உரிமையே எனது நாடித்துடிப்பு. இன ஐக்கியமே எனது உறுதிப்பாடு. அதற்காக பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அனைத்து இன மக்களையும் தங்களது சகோதர மக்களாகவும் இலங்கையர்களாகவும் கருதிச் செயலாற்றுவார்கள் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க் கின்றேன்.

இதேவேளையில் இலரங்கை – இந்திய ஒப்பந்தத்தில் உருவான இலங்கையின் அரசியல்யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்டையில் அமைக்கபட்டுள்ள மாகாண சபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்த ஒரு முழுமையான அரசியல் தீர்வு நோக்கி எமது நாடு பயணிக்க வேண்டும் என்பதையும் நான் இந்தச் சபையில் வலியுறுத்துகின்றேன். தமிழ் பேசும் மக்களி;ன பிரச்சினைகளைப் புலித்தலைமையின் பிரச்சினைகளில் இருந்து வேறுபடுத்தி அரசியல்யாப்பின் 13வது திருத்தச்  சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எண்ணியிருக்கும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சிகளை முன்நகர்த்திச் செல்ல நாம் அனைவரும் உழகைக வேண்டும். இதேவேளையில் வன்னிமண்ணில் புலித்தலைமையின் பலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களை புலித்தலiமையின் பலாத்காரப்பிடியை உடைத்துக் கொண்டு பாதுகாப்பான இடம்நோக்கி வருமாறு  இந்தச் சபையினூடக நான் அழைப்பு விடுக்கின்றேன். புலித்தலைமையால் பலாத்காரமாகப் பிடித்துச் செல்லபட்டும் மூளைச்சலவை செய்யப்பட்டும் அழிவு யுத்தத்தில்  பலி கொடுப்பதற்காகக் கொலைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் எமது பிள்ளைகளை அதிலிருந்து மீட்டு வருமாறு நான் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன். புதிய வாழ்வின் தொடக்கத்துக்காகவும் எங்களது புனர்வாழ்வுக்காகவும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெருந்தொகையான நிதியை ஒதுக்கியிருக்கிறார். ஜனநாயகத்தைப் பலப்படுத்தி சமாதான தேசத்தை நோக்கி நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் பயணிப்பதற்காக நீங்கள் முன்வர வேண்டும் என உங்களுக்கு இந்தச் சபையினூடாக நான் அழைப்பு விடுக்கின்றேன். இன்று வரை எமது மக்கள் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழந்து வருவதால் அவலங்களுக்குள் சிறைப்பட்டு வாழவேண்டிய துயரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அழிவுப்பாதையைக் கைவிட்டு ஜனநாயகத்தைப் பலப்படுத்த முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கின்றேன்.

கிழக்கின் உதயம் போல் இனிவரப்போவது வடக்கின் வசந்தம் இனிய வாழ்வை நேசித்து எம்மிடம் வந்து சேருங்கள் எமது பாதுகாப்புப் படையினர் செய்துவரும் அர்ப்பணங்களினால் நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்பொழுதுதான் புலிநகரியாக  இருந்த மண் பூநரியாக மாறியிருக்கின்றது. இதுபோன்று புலிநொச்சியாக இருக்கின்ற மண்ணும் விரைவில் கிளிநொச்சியாக மாறவேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பமாகும். அவ்வாறே புலிக்குடியிருப்பு புதுக்குடியிருப்பாக மாறும் காலமும் விரைவில் உருவாகும். பாதுகாப்பு படையினர் புலித்தலைiமையிடம் இருந்த அப்பாவி மக்களை வேறுபடுத்தி இதனைச் செய்து முடிப்பார்கள் என்பதே எமது மக்களின் நம்பிக்கையாகும். எமது மக்களின் அரசியல் உரிமைக்கும் சமாதான எண்ணங்களுக்கும் அச்சமற்ற வாழ்வுக்கும் தடையாக இருந்துவரும் புலித்தலைமை தற்கொலை செய்து கொள்வது சிறந்த வழியாகும்.அவ்வாறில்லாவிடில் எமது மக்களின் விரோதிகளான புலித்தலைமை அழிக்கபட வேண்டும். எமது மக்களின் அரசியல் தீர்வுக்காக தம்மிடம் இருந்த பலத்த இறுதிவரை பயன்படுத்தாத புலித்தலமை வரலாற்றின் புதைகுழிகளை நோக்கி விழுந்து கொண்டிருக்கின்றது.

அனைத்து இன மக்களினதும் தனி மனித பாதுகாப்புக்காகவும் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் ஜனநாயகத்தின் மீட்சிக்காகவும் நடைமுறை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு நம்பிக்கையுடன் நான் இந்தப் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றேன். உறவுக்கு கரம் கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம். நன்றி.

4 டிசம்பர் 2008

Related posts:

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ந...
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...