‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019

‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று இந்த விவாதத்தைக் கொண்டு வந்துள்ள தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்கின்றன. அதில் ஒரு அங்கமாகவே – அநேகமாகக் கடைசி அங்கமாகவே – இன்றைய இந்த விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இது வெறும் விவாதமாக இருக்குமே தவிர இதனால் ஆகப் போகின்ற பயன் எதுவும் கிடையாது என்பது இந்த விவாதத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவர்களுக்கு வாக்களித்த எமது மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கும், அடுத்த தேர்தலின்போது வெறுங் கையுடன் வீடு வீடாகப் போனால் எதுவும் நடக்காது என்பதால், இந்த விவாதத்தையாவது எடுத்துக் கொண்டு போவோம் என நினைத்திருப்பதாலும், இந்த இரண்டு நாட்கள் அவர்களது கடைசி நேரப் பிழைப்பாகவே இருக்கின்றது.

என்றாலும், எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. எமது மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தத் தரப்பினர் அடிக்கடி மறந்துவிடுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?” என்றொரு பழமொழி இருக்கின்றது. இந்தப் பழமொழி இவர்களது செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை தமிழ் மக்களது ஏனைய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மாட்டோம் என்றவர்கள், எமது மக்களுக்கு அன்றாட, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ, அபிவிருத்தி தேவையில்லை, அரசியல் தீர்வே தேவை என்றவர்கள், அதற்காகவே இந்த அரசாங்கத்தைத் தாங்கள் கொண்டு வந்ததாகக் கூறினார்கள்.

இந்த அரசாங்கத்தின் முதல் அத்தியாயம் தொடங்கியிருந்த ஆரம்பத்தில் நூறு நாட்கள் வேலைத் திட்டமென ஒரு காலகட்டம் உருவாகியிருந்தது. அதன்போது இந்த அரசாங்கம் தென் பகுதி சார்ந்த தமது தேவைகள் அனைத்தையும் வெகுவிரைவாக நிறைவேற்றிக் கொண்டது. இந்தத் தமிழ்த் தரப்பினர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இதயசுத்தியுடன் இருந்திருந்தால், அப்போதே ஏதாவதொரு இலக்கை எட்டியிருக்க முடியும். ஆனால், அதை இந்தத் தமிழ்த் தரப்பினர் செய்திருக்கவில்லை.

பின்னர், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த அரசாங்கத்தின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமானது. இதன் ஆரம்ப கட்டத்தில்கூட இந்தப் பிரச்சினைக்கு ஏதாவதொரு தீர்வினை எட்டியிருக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு மிக அதிகளவில் இருந்தது. இருந்தும் அவர்கள் அது குறித்து எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

அதன் பின்னர், இந்த அரசுக்கு எதிரான பல்வேறு நிலைமைகள் நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்டபோது, இந்த அரசை தனித்து நின்று, முண்டு கொடுத்துக் காப்பாற்றும் அளவுக்கு வந்துவிட்ட இவர்கள், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பில் எவ்விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, இன்று இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டே, அரசாங்கத்தில் இல்லாததுபோல் மக்கள் முன்பாக நடிப்பதுதான் இவர்களது அரசியலின் இன்றைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகின்றது.

அரசியல் யாப்புச் சபையின் வழிநடத்தல் குழு அடங்கலாக ஏனைய 06 உப குழுக்களும் கடந்த 2017ஆம் ஆண்டு தமது அறிக்கைளைச் சம்ரப்பித்திருந்த நிலையில், 2018ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் அது தொடர்பிலான ஒரு வரைபினைத் தயாரிக்காது, வாய்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒக்டோபர் மாத ஆட்சி மாற்றத்தின்மீது இப்போது பழி சுமத்தப் பார்க்கிறார்கள். இப்படித்தான் இவர்கள் தமது கையாலாகாத தனத்தினை மூடி மறைத்து வருகிறார்கள்.

19வது திருத்தச் சட்டத்தின் தயாரிப்பில் மிக முக்கிய பங்கினை இவர்கள் வகித்ததாக இவர்களே கூறி வருகின்ற நிலையில், அந்தத் திருத்தச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தினை மேலும் வலுப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்க இவர்களால் ஏன் இயலாமற் போனது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

ஆக, இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருந்தும், தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத இவர்கள், இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் தீர்வு தொடர்பில் – அரசியல் அமைப்பில் மறுசீரமைப்புத் தொடர்பில் கதைக்கின்றார்கள் எனில், இதை என்னவென்று சொல்வது? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கென கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வராத கூட்டத்தினர் இப்போதும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ஆட்சியில் இருந்து கொண்டே புறக்கணித்து வருவதுதான் கொடுமையான விடயமாக இருக்கிறது

மொழி உரிமை பற்றி வாயளவில் பேசிக் கொண்டே ‘கம்பெரலிய”வில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பணம் கிடைக்கும் என்றால் அவர்களுக்கு மொழியுரிமை ஒரு பொருட்டல்ல

கடந்த ஆட்சிக் காலங்களில் நெல்சிப் என்கின்ற திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்@ராட்சி மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நெல்சிப் திட்டத்தில் கூட இதே தமிழ்த் தரப்பினர் அவர்களது நிர்வாகத்தின் கீழிருந்த உள்@ராட்சி சபைகளிலே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிருந்த வரலாறும் உண்டு என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

‘திவிநெகும’ – வாழ்வின் எழுச்சித் திட்டமானது ஒரு சட்ட ஏற்பாடாக வர இருந்தபோது, அதன் ஊடாக மாகாண சபைகளின், உள்@ராட்சி சபைகளின் மூலமான சில அபிவிருத்தித் திட்டங்கள் பறிபோய்விடும் என அதனை நிராகரித்தோர், இன்று மத்திய அரசின் வேலைத் திட்டத்தை ‘கம்பெரலிய’ என தங்களது நிறைவேற்றுச் செயற்பாடாக பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிகாரப் பகிர்வு பற்றியும் கதைக்கின்றனர்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலமொன்று கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஒரு குழு நாடாளுமன்றத்தில் நியமனம் பெற்றது. அந்தக் குழுவின் அறிக்கையானது ஒரு வருடம் ஆகின்ற நிலையிலும் இதுவரையில் இல்லாத காரணத்தால், மாகாண சபைகளுக்கான தேர்தலில் இழுபறி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைக்கின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வெறுமனே ஊடகங்களுக்காகக் கதைக்காமல், இந்த அறிக்கையை விரைவுபடுத்தி, தற்போது இருக்கின்ற அதிகாரப் பகிர்வு தொடர்பில் அக்கறை எடுத்திருக்கலாம். அதுவும் இல்லை

இன்று நிலையில்லாத ஓர் அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அரசாங்கத்திற்கு முன்னைய அரசாங்கங்களைப் போல் அல்லாத வகையில் நிறையவே பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அடுத்து வரவிருக்கின்ற தேர்தலுக்கு தென்பகுதி வாக்குகளை எப்படிக் கவர்வது? என்ற சிந்தனையிலேயே தென் பகுதி அரசியல் கட்சிகள் இப்போது மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றன.

இத்தகையதொரு நிலையில், தென்பகுதிக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு முன்வருமா? என்பது குறித்துக்கூட யோசிக்கின்ற அளவுக்கு இந்த தமிழ்த் தரப்பினருக்குத் தேர்தல் ஒன்று நெருங்குகின்ற இந்தக் காலகட்டத்தில் புத்தி பேதலித்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? எனச் சிலர் கேட்கின்றனர்.

அவ்வாறு புத்தி பேதலிப்பு எனப் பொதுமக்கள் நினைக்கின்ற அதே நேரம், இதையே இந்தத் தமிழ்த் தரப்பினர் புத்தி சாதுர்யம் என நினைக்கிறார்களாம் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது, எதுவுமே நடக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இப்படி ஒரு நாடகத்தை ஆடி, எமது மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியும் என இவர்கள் நினைக்கிறார்களாம்.

தங்களது பல தலைமுறைகளுக்குப் பணம், சொத்துச் சேர்த்து வைப்பதில் இந்தத் தரப்பினர் காட்டும் ஆர்வத்தில் ஒரு சிறிதளவாவது எமது இந்தத் தலைமுறை மக்கள்மீது காட்டியிருந்தால், எமது மக்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பாவது கிடைத்திருக்கும்

இந்த விவாதத்தைக் கொண்டு வந்துள்ளவர்கள், தாங்களே கொண்டு வந்ததாகச் சொல்கின்ற இந்த ஆட்சியின் – பின்னர் பலமுறை ஆட்சி கவிழாது தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள இந்த ஆட்சியின் தலைவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், ‘தேசியப் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்’ எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது பக்கத்தில் இருந்து கொண்டே அவரைப் புகழ்ந்த இதே தமிழ்த் தரப்பினர், அவர் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறியதும், அவரது கூற்றை நம்ப முடியாது என ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டது வேறு கதையாகும்.

அதாவது, பெற்றுக் கொடுப்போம் என்று அல்ல, பெற்றுக் கொடுப்பது நோக்கமாகும் என்றே கூறியுள்ளார்.

ஆக, இந்தத் தமிழ்த் தரப்பினரது நம்பகரமான தலைவர் அவர்களே இன்னும் இரண்டு வருடத்தின் பின்னர்தான் அது பற்றிப் பேசப்படும் எனத் தெரிவித்துள்ளமை தெரிய வருகின்றது.

ஆகவே, தேசியப் பிரச்சினைக்கு இப்போiதைக்குத் தீர்வு சாத்தியமில்லை எனத் தெரிந்து கொண்டுதான் இந்தத் தமிழ்த் தரப்பினர் எமது மக்களை இதுவரையில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. எனவேதான், இந்தத் தமிழத் தரப்பினர் தீபாவளிக்குத் தீபாவளி ஏதோ தீபாவளிப் பட்டாசு போல், அரசியல் தீர்வு அடுத்த தீபாவளிக்கு வரும் – அடுத்த தீபாவளிக்கு வரும் எனக் கூறிக்கொண்டு வந்துள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

இன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு முன்பாக, எல்லோருமாகத் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து இந்த அரசுக்கு தங்களது நிலைப்பாட்டினை உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை ஒரு வாரத்தில் தீர்ப்பதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்களில் கூறுகின்ற நிலையிலும், முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் பதவிகளை எற்காமல் இருப்பதானது அவர்களது சமூகம் சார்ந்து அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையினையே எடுத்துக் காட்டுகின்றது.

ஆனால், இந்தத் தமிழ்த் தரப்பினரின் தமிழ் மக்கள் மீதான அக்கறையின்மை காரணமாகவும், தங்களது சுயதேவைகள் மட்டுமே இவர்களது தேவை என்பதாலுமே, ஒரு வாரத்தில் முஸ்லிம்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறுகின்ற பிரதமர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு வருடங்களின் பின்னர் யோசிப்போம் என்கிறார். இதுதான் உண்மையான நிலைமை என்றே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இலங்கை வந்தபோது, இதே தரப்பினர் ஓடிப் போனார்கள். அவர் தனது அலுவல்களை இலங்கையில் முடித்துக் கொண்டு போகும்போது, இந்தியாவுக்கு வரும்படி கூறிவிட்டுப் போனார். இந்தியாவிற்கு ஓடினார்கள். அங்குபோய் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்றா கேட்டிருப்பார்கள்? என்றா நினைக்கிறீர்கள். இருக்காது, தங்களுக்கு அங்கே என்னென்ன சுயதேவைகள் உண்டோ, சொத்துக்களுக்கான பாதுகாப்புத் தேவையோ அவை பற்றிக் கதைத்திருப்பார்கள்.

இந்தியாவில் போய் அரசியல் தீர்வு பற்றிப் பேசினால், என்ன நடக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். ஆகவே, வெறுமனே பத்திரிகையில் மட்டும் அறிக்கை விடுவார்கள் – இந்தியா எமது அரசியல் தீர்வுக்கு உதவ வேண்டும் என்று அவ்வளவுதான்.

இந்தியா ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உயிரோடு இருக்கின்றபோது, அதைவிட வேறொரு தீர்வைக் கொண்டு வருவதற்கு இந்தியா ஒன்றும் இந்தத் தமிழ்த் தரப்பினரைப் போன்று கொள்கை இல்லாத நாடல்ல என்பதை இவர்கள் மறந்தவிடக் கூடாது

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையே இந்தியா இன்னமும் வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், இப்போது ஆட்சி செய்கின்ற பாரதீய ஜனதா கட்சியாக இருக்கட்டும் அல்லது நாளடைவில் இன்னுமொரு மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவின் நிலைப்பாடு அதுதான். அதில் ஒன்றும் மாற்றத்திற்கு இடமில்லை.

எனவே, இனிமேலும் இத்தகைய வாத விவாதங்களைக் கொண்டு வந்தும், ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் எமது மக்களை ஏமாற்றியது போதும்.

அதிலும், ஒருவர் அடுத்த தீபாவளிக்கு அரசியல் தீர்வு வரும் என்கின்றபோது, இன்னுமொருவர் அதோ, இதோ வெளிவந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருந்தார். இப்போது அவரும் இதைப் பற்றி கொஞ்சக் காலமாக மூச்சு விடக் காணோம்.

ஆக, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து இப்படியே பொய்யிலேயே அரசியல் செய்து கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களை மீண்டும், மீண்டும் பாதித்துக் கொண்டிருக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்கள் செய்த பாவம், உங்களுக்கு வாக்களித்தது எனில், அந்தத் தவறையும் இனி எமது மக்கள் செய்ய மாட்டார்கள் என்பதையும் எமது மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு!! கும்பி கூழுக்கு அழுகிறது கொண்டை பூவிற்கு அழுகிறது என்று சொல்வார்கள். அதுபோலவே, தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும், அன்றாடப் பிரச்சினைகளின் தீர்விற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும், தமிழ் மக்களை உசுப்பேற்றி, மயக்கத்தில் ஆழ்த்தி தமிழ் மக்களின் பெயரால் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளோ, அடுத்த தேர்தலிலும் எப்படி வெல்லலாம் என்ற மாய மந்திரங்கள் குறித்தே தமது கனவுகளில் கூட சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் வாக்குப்பலத்தில் கிடைத்த தமது அரசியல் பலத்தை வைத்து அரசுடன் பேரம் பேசி தத்தமது சொந்தச் சலுகைகளைப் பெற்று தமது சொந்த வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையைக் கடந்த காலங்களைப் போலவே இந்த ஆட்சிக்காலத்திலும் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து நிரூபித்து வந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி வந்து யாரும் தரப்போவதில்லை.. மயிலே!.. மயிலே!. இறகு போடு என்றால் மயில் ஒரு போதும் இறகு போடாது… அது போலவே, அரசே!. அரசே!.. தமிழருக்குத் தீர்வு தா என்று அரசியல் தீர்விற்காகக் குரல் கொடுப்பது போல் வெறுமனே ஒப்புக்கு மாரடித்துக்கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் எமக்குக் கிடைத்து விடாது.

மாறாக,. எமது அரசியல் பலத்தாலும், மதிநுட்ப அரசியல் வழிமுறையாலும், தேசிய நல்லிணக்கத்தினாலும் நாமே பெற்றெடுக்க வேண்டும். வரலாற்றின் ஓட்டத்தையும், அதன் உண்மைகளையும் தெரிந்து கொண்டும், எம்மீதான அரசியல் காழ்ப்புணர்சியில்,  இதைக் கூற எமக்கு அருகதை உண்டா எனச் சிலர் திட்டமிட்டு எம்மை நோக்கி சுட்டு விரல்களை நீட்டலாம். நாங்கள் சாதித்துக் காட்டியவர்கள் என்ற துணிச்சலோடுதான் எதையும் சாதிக்க வக்கற்ற தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

நாமும் சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் ஓரளவு அரசியல் பலத்தோடு இருந்தவர்கள், ஆனாலும் அந்த ஆட்சி எமது தயவில் அரங்கேறிய ஆட்சியல்ல. எமது ஆதரவை அந்த ஆட்சிக்கு மேலதிக ஆதரவாகக் கேட்ட போது அந்த ஆதரவுக்காக எமது மக்களின் தேவைககளைக்; கேட்டோம்.. அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டோம், அபிவிருத்தியைக் கேட்டோம்,. அரசியல் கைதிகளை விடுவிக்கக் கேட்டோம்,. வலிகாமாம் காணி சுவீகரிப்பை நிறுத்தக் கேட்டோம்,. குடிசன மதிப்பீட்டை நிறுத்தக் கேட்டோம்,.. வடக்கு நோக்கி சமுர்த்தி கேட்டோம்,. தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனம் கேட்டோம்,. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை கேட்டோம்.. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தரப்படுத்தலை உருவாக்கி பல்கலைக்கழக அனுமதியைக் கேட்டோம்… எம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக் கேட்டோம், சுகாதார வசதிகள் கேட்டோம்,. மின்சாரம் கேட்டோம், முன்பள்ளிகள் கேட்டோம், பொதுநோக்கு மண்டபங்கள் கேட்டோம். சனசமூக நியையங்களைப் புதிப்பிக்கவும் உருவாக்காவும் கேட்டோம், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் புனரமைக்க நிதி கேட்டோம், தொழில் நுட்பக் கல்லூரிகள் கேட்டோம், எரியுண்ட யாழ் நூலகத்தைப் புனரமைக்கக் கேட்டோம், வீதிகள் புனரமைக்கக் கேட்டோம், கல்வியல் கல்லூரிகள் கேட்டோம்,. யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம்,.. மக்களின் இயல்பு வாழ்விற்கு இடமளிக்கக் கேட்டோம்.. இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல்,

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசிடம் எமது சொந்தச் சலுகைகளைக் கேட்டதும் இல்லை. அதற்காக அரசின் பின் கதவு தட்டியதும் இல்லை. எமது மக்களின் நலன்களுக்காக அரசுடன் வெளிப்படையாகவே பேசிக்கொண்டோம். அனைத்தையும் நாம் சாதித்துக் காட்டினோம். அவைகளுக்குத் தீர்வும் கண்டோம். அதை விட மேலாக அரசியல் தீர்வு கேட்டோம். அதுவும் கிடைத்தது.

பிராந்தியங்களின் சுயாட்சி,. மதசார்பற்ற அரசு,. காணி பொலிஸ் அதிகாரம். இரு மொழிக்கொள்கை அரசு,.. என சமஸ்டிக்கு ஒப்பான தீர்வை உருவாக்க அன்று நாம் எமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தினோம். சமஸ்டிக்கு ஒப்பான எமது அந்த தீர்விற்கு என்ன நடந்தது?.. விசித்திரமான வேதனை என்னவென்றால்,.. தமிழர்களுக்குக் கிடைத்த அந்த அரியதொரு அரசியல் தீர்வைத் தமிழர்களில் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்தத் தமிழ்த் தரகுக் கட்சித் தலைமைகளே எதிர்த்தது ஒன்றுதான். அந்தத் தீர்வு நகல்களை இதே நாடாளுமன்றத்தில் வைத்து தமிழ்த் தரகுக் கட்சி தலைமைகளும் தீயிட்டு எரித்தது ஒன்றுதான்.

இதை இல்லை என்று மறுக்கும் தமிழ்த் தரகுக் கட்சிகள் இது குறித்து என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவார்களா என்று நான் சவால் விட்டுக் கேட்கிறேன். சரி அதைக்கூட மன்னிப்போம் மறப்போம் என்று விட்டு விடுவோம். அன்று நாம் சந்திரிக்கா அரசுக்கு மேலதிக ஆதரவை வழங்கியது போல் அன்றி, இதே தமிழ்த் தரகுக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் இன்று நடக்கும் இந்த ஆட்சி கூட நடந்திருக்காது.

தமது தயவில் மட்டும் உருவான இந்த ஆட்சியை கொண்டுவந்த தமிழ்த் தரகுக் கட்சித் தலைமைகள், தமக்குக் கிடைத்த போதிய அரசியல் பலத்தை வைத்து இந்த அரசுடன் என்ன பேரம் பேசினார்கள்?.. தாம் வாழ மட்டும் ஆடம்பர மாளிகைகள் கேட்டார்கள். வரிச்சலுகையற்ற ஆடம்பர வாகனங்கள் கேட்டார்கள். ஒருங்கினைப்புக்குழுக்களின் தலைவர் பதவி கேட்டார்கள். குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி கேட்டார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கேட்டார்கள். பணப்பெட்டிகள் கேட்டார்கள்.

இது போன்ற தமது சொந்தச் சலுகைகளை மட்டுமன்றி தமது ஆதரவில் உருவான இந்த அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எதைத்தான் கேட்டார்கள்?.. எமக்கு போதிய அரசியல் பலமின்றிக் கடந்த மகிந்த ராஜ பக்ச அரசில் எமது நல்லிணக்க சமிஞையால் மட்டும் நாம் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுத்ததில் ஒரு துளியளவேனும் போதிய அரசியல் பலத்தோடு இந்த அரசை வீழ விடாது பாதுகாத்து வரும் இவர்கள் எமது மக்களுக்கு எதை பெற்று கொடுத்திருக்கிறார்கள்?..

தாமே இந்த அரசை உருவாக்கியவர்கள் என்று தம்பட்டம் அடித்து இந்த ஆட்சி உருவாகிய போது, தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து அரசுடன் பேரம் பேசினார்களா?  இல்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஆட்சியை மாற்ற முயன்ற போது, இந்த ஆட்சியை விழ விடாது பாதுகாத்த போதாவது இந்த தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள், தமிழர்களின் உரிமைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்த அரசை தாம் தக்க வைக்க ஒத்துழைப்போம் என்று ஏதாவது பேரம் பேசி வெற்றி கண்டார்களா? அதுவும் இல்லை.  இறுதியாக,.. ஜே.வி.பி யினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும், தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை வைத்தே இந்த அரசைத் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் தக்க வைத்தார்கள். அதன் போது கூட தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இவர்கள் எதையாவது பேரம் பேசிப் பெற்றார்களா?..

பெற்றார்களே என்பது உண்மை. ஆனாலும் பெற்றது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்ல. ஒவ்வொரு தடவைகளும் அரசுக்கு ஆதரவு வழங்கும் போது தமது சொந்தச் சலுகைகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்கள். ஆட்சி மாற்ற குழப்பங்களும், அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் இங்கு அடிக்கடி நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பவர்கள் இந்தத் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் மட்டுமே.

அதன் போதுதான் அண்டிப்பிழைக்கும் தமது அரச ஆதரவுக்குப் பரிகாரமாக பணப்பெட்டிகளைப் பரிமாறலாம். தத்தமது சொந்தச் சலுகைகளைப் பெற்று சுக வாழ்வு வாழாலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு, தாமே உருவாக்கிய இந்த அரசின் ஊடாக புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவோம் என்று புலுடா விட்டவர்கள், அந்த ஆட்சிக்காலம் இன்று முடிவுறும் தருவாயில் தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக புதிய அரசியல் யாப்புக் குறித்து இன்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்

கையாலாகாதவர்களே அடுத்தவன் பெயரை கைத்தடியாக பயன்படுத்துவார்கள். அது போலவே இன்று இந்த தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் அடிக்கடி புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரித்து வருகிறார்கள்

பிரபாகரன்  உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள். அது உண்மையோ, இல்லையோ, ஆனால் ஒன்று மட்டும் உண்மை. புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தித் தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது.

பெட்டிப்பாம்பாக நீங்கள் அடங்கியிருப்பீர்கள். தமிழ் மக்களின் வாக்குப்பலத்தைத் தாரை வார்த்துக்கொடுத்துப் பணப்பெட்டிகளை மட்டும் பரிமாறும் உங்கள் சோரம் போகும் அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது..

அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி எனக் காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்@ர மகிழ்ந்தீர்களா இல்லையா?.. இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா?..

அதைவிடவும்,. புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனித நாகரீகப் பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்… புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள்கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.

நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களைக் காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன். நீங்கள் வரவில்லை. எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுயலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன்கூட இன்று உயிருடன் இருந்திருப்பார். முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளைத் துறந்து எதிர்ப்பைத் தெரிவித்தீர்களா?.. இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியைத் துறந்திருப்பேன். ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்… சவப்பெட்டி அரசியல் வாதிகளும்., பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது,.. தமிழ் மக்களையும் ஏமாற்றி,.. உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள்  இன்று பேசத் தொடங்கியுள்ளார்கள்.

முப்பது வருடங்களாகப் போராடி எதைச் சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.

அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலைமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால்,.. அந்த முப்பது வருடப் போராட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்குத் தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.

எமது மக்கள் செய்த பாவம், உங்களுக்கு வாக்களித்தது எனில், அந்தத் தவறையும் இனி எமது மக்கள் செய்ய மாட்டார்கள் என்பதையும் எமது மக்கள் சார்பாகத் தெரிவித்து,

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து எமது மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கான தீரிவினை அரம்பித்து, அதனை முன்னெடுத்துச் செல்வோம்.

என்பதை மீண்டும் வலியுறுத்தி இதைவிட மார்க்கம் உள்ள  அரசியல் தீர்வு எதுவும் இந்தக் காலக்கட்டத்தில் சாத்தியமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...

வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட...
கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...