Tuesday, March 26th, 2019

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் – நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என இந்தச் சபையிலே கடந்த 22 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் அண்மையில் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கு இடமில்லை எனக் கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன அவர்களது கூற்றை ஏற்க முடியாது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.

அதே தினம், கொழும்பில் இடம்பெற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பிரதமர் அவர்கள், கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனீவா கூட்டத் தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதாவது, ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவதைப் போல்”;, இந்த இரு கூற்றுகளையும் பார்க்கின்ற எவருக்கும் அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிரெதிரான கொள்கைளுடன் – அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சார்பாகவும், அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றன என்ற விடயத்தைக் காட்டுவதற்கே இந்தக் கூட்டமைப்பு முற்பட்டாலும் அது, உண்மையல்ல என்பதை எமது மக்கள் நன்கறிவார்கள்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கூறியபோது, இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட சவால்கள் இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை உள்ளடக்குவதனை தடுக்கின்றன என்றும், அது 2ஃ3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பு வாக்குகள் வழங்கி, யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படுவதன் ஊடாகவும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே அன்றி சாத்தியப்பட மாட்டாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச தரப்பில் இவ்வாறான தெளிவுகள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு, “அரசாங்கம் சார்பாக மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இலங்கை தொடர்ந்தும் கடமையாற்றும் என நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டே இணை அனுசரணையில் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த எச்சரிக்கையானது எதற்கானது? என்பது தொடர்பில் சிந்தித்துப் பார்த்தால் அது வெறும் சுயலாப அரசியலுக்கானது என்பது தெரிய வரும்.

இலங்கையில் ஏற்கனவே வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புகள் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் இந்தச் சபையிலே கூறியிருக்கின்றார்கள் எனில், இதை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 40வது கூட்டத் தொடரின்போது வலியுறுத்தினார்களா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசு மாற்றங்களைக் கொண்டு வருமா? என்பதைக் கண்காணிப்பதற்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதனை வரவேற்பதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

மேலும், இந்த அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் இல்லை என்பதை தமிழ் சமூகம்; ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரின்போது, வாயே திறக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமான உண்மையாகும்.

இத்தகைய நிலையில், இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கையை கோரும் அதே நேரம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு உட்பட்டு அதி உச்சக்கட்டமாக பெறப்படக்கூடிய இலங்கைக்கான ஓர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரையும், வடக்கில், கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னமும் தேவை என சிவில் சமூகமானது கோரியிருந்த நிலையில், மனித உரிமை ஆணையாளரும் அதை தனது உரையில் வழிமொழிந்திருந்த நிலையில், மனித உரிமை பேரவையில் இருந்து கொண்டே நாம் சாதிக்கலாம் என்ற இந்தத் தமிழ்த் தரப்பு ஏன் இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கவில்லை?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எச்சரிப்பதற்கு வல்லமை பெற்றவர்களுக்கு இதை செய்திருக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்புகின்ற தமிழ் சமூகமானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு உட்பட்டுகூட அதி உச்சக் கோரிக்கையை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கவில்லை. தீர்மானம் முடிந்த அடுத்த நாளே இரண்டு வருடங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்ல வேண்டி வருமென வாய்ச் சவடால் விடுகின்றனர். இதை தீர்மானம் வருமுன்னர் செய்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனது

2017இல் இரு வருட கால அவகாசத்திற்கு பின் அப்போதும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர், இலங்கையானது ரோம் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும், சர்வதேச நியாயதிக்கத்தை கோர வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இப்போதும் 2019இலும், அதே விடயத்தைத் தான் பரிந்துரைத்துள்ளார். 2021இலும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு இதைத் தவிர வேறு என்ன சொல்லப் போகுது” என கேள்வி எழுப்புகின்ற தமிழ் சமூகமானது, இன்றளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலி வேடகங்களை அம்பலப்படுத்தியுள்ளமையானது பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றி என்றே கூற வேண்டும். அதேவேளை, அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பிரசுரித்திருந்த எமது தமிழ் ஊடகங்களும் பாராட்டப்பட வேண்டியவையே ஆகும்

அதேநேரம், வடக்கு ஆளுநர் ஜெனீவா செல்கின்ற வேளையில், ‘வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர் என்றும், தமிழருக்காக அவர் ஜெனீவா செல்வதா? என்றும் அவருக்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? எனக் கேள்வி எழுப்புகின்ற எமது மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகிவிட்டார்கள் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தமிழ்த் தரப்பினரின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது, எங்கள் பகுதி மக்களிடையே ஒரு கதை கூறப்படுவதுண்டு. உண்மைக் கதை. அதாவது எமது மண்ணிலே பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் இதுவும் ஒன்று. எமது மக்கள் தங்களது பணத்தை நம்பிக் கொடுத்து, ஏமாந்து, தாங்களாகவே தற்கொலை செய்து கொண்ட போராட்டம். ஒருவர் ஒரு நிதிக் கம்பனியை ஆரம்பித்தார் சப்ரா என அதற்குப் பெயர் வைத்தார் என்பதால் இந்தக் கதை ‘சப்ராக்காரன் கதை’ என எமது பகுதியில் கூறப்படுவதுண்டு.

அந்த நிதிக் கம்பனி மூலமாக பல கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பிரசுரித்து, எமது மக்களிடமிருந்து பெரும்பாலான நிதியைத் திரட்டிக் கொண்;டு அவர் மாயமாக மறைந்துவிட்டார். இவரைத் தேடியும், தமது பறிபோன பணத்திற்காகவும் போராடிய எமது மக்கள் இறுதியில் எவ்விதமான தீர்;வுகளும் எட்டப்படாமல் தற்கொலையும் செய்து கொண்டனர்.

அன்று தென்பகுதியின் ஆட்சியினருடனும், வடக்கிலிருந்த அதிகாரத் தரப்பாருடனும் கூடிக் குழாவி, இந்த மோசடிக் காரர் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இந்தவகையில் எமது மக்களின் வாழ்நாள் சேமிப்பினை சப்பித் தின்ற அந்த நிறுவனக்காரர் இன்று இந்த சபையையும் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பது வேறு கதை.

எமது மக்களது பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, தப்பியோடிய அந்த நபர் பிறகு அந்தக் கொள்ளையடித்த பணத்தை வைத்து ஒரு பத்திரிகையையும், வேறு சில தொழில் முயற்சிகளையும் சென்னையிலும், கொழும்பிலுமாக ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஊதியங்களிலிருந்தும் ஊழியர் சேமலாப நிதி என அறவிட்டு அவற்றை ஏமாற்றியும், ஊடகவியலாளர்களை அடிமைப்படுத்தியும் வந்த இவர், இன்று முகமூடி அணிந்துகொண்டு, ஊடகப் பேராளி என தனக்குத்தானே மகுடமும் சூட்டிக் கொண்டுள்ளார்

யாழ்ப்பாணம் நூலக எரிப்பிற்கு துணைபோன வரலாற்றைக் கொண்ட இந்தப் பேர்வழி, விளம்பரம் கருதியும், நட்டஈடுகளை குறிவைத்தும், தனது ஊடக நிறுவனத்தை தானே கூலிக்கு ஆட்களை வைத்துத் தாக்கி, அதை வருவோர் போவோருக்கெல்லாம் காட்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களது கொலைகளை செய்திகளாக்கி இலாபம் கண்ட இவர், அந்த ஊடகவியலாளர்களது மரண அறிவித்தல்களை தமது ஊடகத்தில் பிரசுரிப்பதற்குக்கூட பணம் வாங்கிக் கொண்டார். அந்த ஊடகவியலாளர்களைப் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் கதைத்து கொண்டு,  தனது ஊடகம் மூலமாக மக்களுக்கு வழிகாட்டுவதாக கூறி வருகின்றார்.

இதை ஏன் நானிங்கு கூறுகின்றேன் என்றால், அந்த சப்ராகாரரின் கதையைப் போலத்தான் இருக்கிறது இன்று இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடும். எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

அதாவது எமது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து, அதை வைத்து தென்பகுதி அரசுகளுடன் தங்களுக்கான சலுகைகளை, வரப்பிரசாதங்களை பெற்று, இறுதியில் அதே தமிழ் மக்களை விற்றுத் தின்கின்ற அளவுக்கு வந்தும், தமிழ் மக்களுக்கு வழி காட்டுகின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, தனது ஊடகத்தின் ஊடாக அக்காலகட்டத்தில் நடந்திருந்த கொலைகளை மூடிமறைத்தும், திசை திருப்பியும், அதற்கு நியாயம் கற்பித்தும் தவறான வழிகளை மக்களுக்குக் காட்டியும், பல்வேறு அழிவுகளுக்கு துணை போயிருந்த இத்தகைய நபர்களும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்களாவர். அவர்கள் இன்று தமிழ்த் தேசியத்தைப் போர்த்திக் கொண்டு இங்கேயும் உளாவிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நாட்டை சர்வதேசத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தென் பகுதியில் சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல உண்மை. தமிழ் மக்களையும் சர்வதேசத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும்

இறுதியில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிவிட்டு, கண்காணிக்கின்றோம் என சர்வதேசம் ஒதுங்கி நின்றாலும், இனி அடுத்த இரண்டு வருடங்கள் வரையில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என இந்த அரசும் ஒதுங்கிவிடாமல், எமது மக்களுக்கு நியாயப்பூர்வமான வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். குறுகிய இனவாத சக்திகளுக்கு அஞ்சி, இந்த நாட்டு மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களது உணர்வுகளை ஒடுக்கிவிடக்கூடாது.

அந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னரான இந்த நாட்டு அரசின் கடப்பாடுகளை நேர்மையுடன் முன்னெடுப்பதற்கு இந்த அரசாங்கம் இனியாவது முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். சர்வதேச அழுத்தங்களை எதிர்க் கொள்வதைத் தவிர்த்து, அதை உங்களால் செய்ய முடியும். மனமிருந்தால், எதுவும் முடியும். அரசாங்கம் அப்படி எதையாவது தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்ததாக முன்னெடுக்கின்ற வேளையில், அதை இனவாத குறுகிய கண்ணோட்டத்துடன் தெற்கில் பார்க்கக் கூடாது என்ற கோரிக்கையினையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் உணர்வுப்பூர்வமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால், நிச்சயமாக பொறுப்புக் கூறல் என்பதை ஒரு வெறுப்பான விடயமாகப் பார்க்கக் கூடாது என்றே கூறிவைக்க விரும்புகின்றேன்

இலங்கையின் கடவுச் சீட்டுகளைக் கொண்ட, இரட்டை பிரஜாவுரிமையுள்ள புலம்பெயர் எமது நாட்டு மக்களுக்கு இலங்கைத் தேர்தல்களில் வாக்களிக்கின்ற உரிமைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைளை உருவாக்க வேண்டும்

புலம்பெயர் எமது மக்களின் மொழி, கலை, கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக எமது பிரதேச உற்பத்திகளின் நுகர்வுகள் தொடர்பிலான ஊக்குவிப்பினை மேற்கொள்ளும் வகையிலும், பிரதேச ரீதியிலாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய வகையிலான ஆலோசனைகள் – வழிகாட்டல்களை மேற்கொள்கின்ற வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் ஓர் ஏற்பாடு முன்னெடுக்கப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வருகின்றதாக அரச தரப்பினர் கூறுகின்ற நிலையில், நேற்றைய தினம் தென்பகுதியிலே உல்லாசப் பிரயாணத்துறை சார்ந்த ஹோட்டல்கள் மிக அதிகமாக மூடப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை அதிகளவில் முன்னேறி வருகின்றதெனில், இவ்வாறு ஹோட்டல்கள் மூடப்பட வேண்டிய அவசியங்கள் இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதான பல்வேறு இடங்கள் மற்றும் விடயங்கள் இருந்தும் அத்துறை சார்ந்த அபிவிருத்திகள் இல்லாமை காரணமாக அவை அப்படியே தொல்பொருட்களைப் போல் காட்சியளிக்கின்றன. இப்படியே போனால் அவற்றை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து வருகைத் தருகின்றனவர்கள், இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து வருகைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகள், பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள், பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற எமது புலம்பெயர் உறவுகள் என நான்கு வகைப்பட்டவர்களது வருகைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இந்த நான்கு பிரிவினரையும் கவரக்கூடிய வகையில், அங்கு வாழுகின்ற எமது மக்களது மொழி, கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களை கருத்திற் கொண்டதாக சுற்றுலாத்துறை விருத்தி பெறுமானால், இலங்கை சுற்றுலாத்துறை வருமானத்தில் கணிசமானளவு பங்களிப்பினை வடக்கு மாகாணத்தால் ஈட்டிக் கொடுக்க முடியும்.

குறிப்பாக, வரலாறு சார்ந்த முக்கிய இடங்கள், கடல் சார்ந்த இயற்கை இடங்கள், குளம் சார்ந்த இயற்கை இடங்கள், சரணாலயங்கள், மதங்கள் சார்ந்த தலங்கள் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்கள் வடக்கு மாகாணத்திலே எமது மக்களைப் போலவே கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. இவை மேம்படுத்தப்பட்டு, நவீன வசதிகளுக்கு உட்படுத்தப்படுவதன் ஊடாக வடக்கின் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய முடியும்.

யானை – மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகள் என்ற விடயமும் தற்போது இந்த நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது

கடந்த 2016ஆம் ஆண்டு 279 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 68 பேர் யானைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

2017ஆம் ஆண்டில் 256 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைத் தாக்குதல்கள் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டைப் பொறுத்தமட்டில் சுமார் 311 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலே மிக அதிகளவிலான யானை – மனிதர் மோதல்கள் அம்பாறை மாவட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் மேற்படி வாய்ப்புகள் குறைவு எனவும் கூற முடியாது. அதேநேரம், வடக்கு மாகாணத்திலே குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற  மாவட்டங்களிலே யானைகள் – மனித மோதல்கள் காரணமாக எமது மக்கள் கடந்த யுத்த காலத்தைவிட மிக மோசமான அச்ச நிலைமைக்குள்ளேயே வாழ்ந்து வர வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலே கண்டாவளை பிரதேசத்தில் கல்மடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்கு சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் வேலி அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்குளம் கிராமத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, மூன்றே மாதக் காலப் பகுதிக்குள் அது சேதமாகிவிட்டதால், மீண்டும் காட்டு யானைகளின் தொல்லைகள் தாங்க இயலாதுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கிண்ணையடி கிராம மக்கள் காட்டு யானைகள் தொல்லை காரணமாக இரவில் தூங்காமல் விழித்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இப்படியே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பிற்பட்ட காலத்தில் எமது மக்கள் வாழ்வதற்காக மனிதர்களுடனும், விலங்குகளுடனும்  போராடி வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த காட்டு யானைகள் – மனிதர்கள் மோதல் தொடர்பில் ஒரு நிலையான தீர்வினை எட்ட வேண்டிய நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வாக பனை மரங்களை நடுவதன் மூலமாக வேலிகளை அமைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இது ஒரு சிறந்த பாதுகாப்பு முறை என்பதுடன், யானைகளுக்குத் உணவாகவும், மக்களுக்கு பொருளாதார ஈட்டல்களை மேற்கொள்ளக்கூடியதாகவும்; இருக்கின்ற ஒரு திட்டமாகும்.

அதேநேரம், தற்போது தேனீக்கள் வளர்ப்பதன் ஊடாக இத்தகைய காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்; பெறலாம் என்றும் கூறப்படுகின்றது. எனவே, உரிய நிரந்தர ஏற்பாடொன்று தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுகின்றேன்.

Related posts:


வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் - மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...